Monday, November 13, 2017

பிரிட்டனில் வளரும் மதச்சார்பின்மை

பிரிட்டனில் வளரும் மதச்சார்பின்மை


பிரிட்டனில் மதச்சார்பின்மை வளர்ந்து வருகிறது என்று சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.


பிரிட்டன் அரசாங்கம் பத்து ஆண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகை புள்ளி விவரம் வெளியிடுகிறது. சென்ற முறை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில், ஏறத்தாழ 25%-னர் தங்களை மதச்சார்பு அற்றவர்களாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்கள்.
இந்த புள்ளிவிவரத்தினை நோக்குகையில் ஒவ்வொரு பத்தும் ஆண்டு அதிகாரப்பூர்வ அரசாங்க கணக்கின் படியே மதச்சார்பின்மையினர் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது. (Reference : https://humanism.org.uk/campaigns/religion-and-belief-some-surveys-and-statistics/census-2011-results/)


வேடிக்கை என்னவெனில் பிரிட்டன் ஒரு கிறிஸ்தவ நாடு. இதில் தற்போதைய வாடிக்கை என்னவெனில் ஒவ்வொரு பத்து ஆண்டும் கிறிஸ்தவர் என்று அடையாளப் படுத்திக் கொள்வதை காட்டிலும் தங்களை மதச்சார்பற்றவராக மாற்றிக் கொண்டு வரும் மனப்போக்கு.


British Social Attitude Survey என்ற தலைப்பில், சமீபத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு கணக்கெடுப்பை நடத்தி புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு. இந்த அமைப்பினர் 1983ல் இருந்தே இந்த கணக்கெடுப்பை நடத்தி புள்ளிவிவரங்களை சேகரித்து, தொகுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த புள்ளி விவரம் சொல்லும் சேதி இதுதான். பிரிட்டனில் தற்போது 53% மக்கள் தங்களை மதச்சார்பு அற்றவராக கருதுகிறார்கள் என்பதுதான் வியப்பான செய்தி. (Reference:https://humanism.org.uk/2017/07/05/53-of-britons-are-non-religious-says-latest-british-social-attitudes-survey/)


குறிப்பாக இளைஞர்கள் 18லிருந்து 25 வயது வரை உள்ளவர்களில் 71%-னர் தங்களை மதச்சார்பு அற்றவர்களாக குறிக்கிறார்கள்.
)


இந்த செய்தி கிறிஸ்தவ தேவாலயங்களை நிலை குலைய செய்துள்ளது என்றே சொல்லலாம். ஒரு கிறிஸ்தவ நாடு தன்னுள் பலரை கிறிஸ்தவராக அடையாளம் காட்டாமல் இருப்பது தேவாலயங்களுக்கு பேரிடிதான்.


இந்த செய்தியை பிரிட்டனில் வாழும் தமிழர்களோடு பொருத்திப் பார்ப்போம். பிரிட்டனில் வாழும் தமிழர்கள் எண்ணிக்கையில் மிக மிகச் சிறுபான்மையினரே. நூற்றுக்கு 2 விழுக்காட்டுக்கும் குறைவே. பெரும்பாலும் தங்களை ஹிந்துக்கள்(சைவர், வைணவர்) என்று நம்புகிறவர்கள். மேலும் தமிழர்களை கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும், பகுத்தறிவாளருமாக வகுக்கலாம்.


பிரிட்டன்னில் ஏன் மதச்சார்பின்மை வளர்கிறது?
பிரிட்டனின் கல்வித்திட்டம் மாணவர்களுக்கு சுதந்திர உணர்வோடு கேள்வி கேட்கும் சூழலை ஏற்படுத்தி தருகிறது. எதனையும் திணிக்கும் நோக்கில் செயல்படுவதில்லை. குறிப்பாக தாங்கள் கிறிஸ்தவ நாடாக இருந்தாலும் கிறிஸ்தவ மதத்தை பள்ளி மாணவர்கள் மீது திணிப்பது இல்லை. மனப்பாடக் கல்வியை காட்டிலும், புரிந்து கொண்டு செயல்படும் கல்வியை ஊக்குவிக்கிறது. இயல்பாகவே இதன் மூலம் புரிந்து கொள்வது என்னவெனில் கேள்வி கேட்டு ஆராயும் மனப்பான்மை வளர வளர மூட நம்பிக்கைகள் தேயத்தானே செய்யும். அதாவது Inversely proportional.


அலுவலக சூழலில், யாரும் மதத்தை உள்ளே கொண்டு வருவதில்லை. அத்தோடு எந்த மதத்தினரையும் துவேஷத்துடன் பேசுவதும் கிடையாது, நடத்துவதும் கிடையாது. அனைவரையும் அன்போடே நடத்துகிறார்கள். அனைத்து மதம் பற்றியும் ஒரு புரிதல் இருக்கிறது. ஹிந்து மதம் என்றால் ஜாதிகள் இருக்கிற, மூட நம்பிக்கைகள் இருக்கிற மதம் என்ற புரிதல் பிரிட்டன் மக்களுக்கு இருக்கிறது. அதேவேளையில் தாங்கள் சார்ந்துள்ள கிறிஸ்தவ மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை கேள்வி கேட்கவும் செய்கிறவர்கள் உண்டு.


பிரிட்டனில் வாழும் தமிழருக்கு மதச்சார்பின்மை ஏன் அவசியம்?
பிரிட்டனில் வாழும் தமிழர்களுக்கு பெரும்பாலும் ஒரு அச்ச உணர்வு உள்ளது. இறை நம்பிக்கைக்கு உள்ள பல காரணங்களில் அச்ச உணர்வும் ஒன்று என்று தோன்றுகிறது. அச்சம் என்பது ஒரு இயற்கையான உணர்வு. யாருக்குத்தான் அச்சம் இல்லை. அச்சம் இல்லாமல் மனிதன் இருக்க முடியாது; ஆனாலும் ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’ - எதற்கு அஞ்ச வேண்டுமோ அதற்கு அஞ்ச வேண்டும். அதை விடுத்து மூட நம்பிக்கைகளுக்கு அஞ்சுவது நேர விரயம், பொருள் விரயம், வீண் செயல். பிரிட்டன் தமிழர்களை, பெரியவர்கள் இளையவர்கள் என இரண்டாக வகுத்துக் கொண்டால், பெரியவர்களுக்கு ஹிந்து மத நம்பிக்கை நிறையவே இருக்கிறது. அதே வேளையில் இளையோருக்கு கேள்வி கேட்கும் ஆராயும் மனப்பாங்கு இருக்கிறது. சொல்லப்போனால் பார்ப்பனர் அல்லாத தமிழர்களுக்கு தாங்கள் மத ரீதியாக கோவிலில் இழிவு படுத்தப் படுகிறோம் என்ற புரிதல் கூட இல்லை. தமிழரால் கிறிஸ்தவ நாடான பிரிட்டன் பாராளுமன்றத்திற்குள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக செல்ல இயலும். கிறிஸ்தவ பாதிரியார் ஆக இயலும். ஆனால ஹிந்து மதத்தை ஏற்றுக் கொண்ட தமிழரால், தான் பொருள் கொடுத்து, பணம் கொடுத்துக் கட்டிய பெரும் கோவிலில் மத குருமாராக அதாவது அர்ச்சகராக முடியாது. உயர் ஜாதி பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும். இதுதான் கள யதார்த்தம்.


மாணவர்கள் பயிலும் ஒரு பள்ளி அல்லது கல்லூரி என்று எடுத்துக் கொண்டால், 100பேர் பயில்கிறார்கள் என்று எடுத்துக்கொண்டால், விகிதாச்சார அடிப்படையில் அதில் 2 பேர்தான் தமிழ் மாணவர்களாக இருக்க முடியும். தற்போதைய கள நிலவரப்படி, பிரிட்டனில் இளைஞர்களில் அதாவது 18-25 வயதுக்கு உட்பட்டவர்களில் 71%-னர் மதச்சார்பு அற்றவர்களாக இருக்கிறார்கள்.
அப்படி இருக்கையில், இயற்கையாகவே அந்த 2 தமிழ் மாணவர்களைச் சுற்றி 71 பகுத்தறிவாளர்கள் இருக்கும் சூழல்தான். இப்படிப்பட்ட சூழலில் தமிழ்ப்பெற்றோர்களும் தங்கள் இளையோர் மேல் மூட நம்பிக்கைகளான நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எம கண்டம், ஜோசியம், ஜாதகம், ஹோமம், பூஜை, புனஸ்காரம் என்று தினிப்பது இளையோருக்கு செய்யும் சமூக அநீதியாகவே அமையும். பிரிட்டன் வாழ் தமிழ் இளைஞர்கள் மூட நம்பிக்கை பக்கம் செல்லாமல், கேள்வி கேட்டு ஆராயும் பக்கம் இருப்பது, தன்னம்பிக்கை மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பெரிய உந்துதலாக அமையும்.


பிரிட்டன் கல்வித்திட்டம் தன் கல்வியில் கொடுக்கும் சுதந்திரம் அதாவது கேள்விகளை ஊக்குவிக்கும் தன்மை, மாணவர்களை ஆராய்ச்சி மனப்பாங்குக்குக்கு உருவாக்கும் முறை போன்றவைகளை உள்வாங்கி, மேலும் கடந்த ஒரு நூற்றாண்டு சமூக நீதி வரலாறு அடங்கிய கல்வித்திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டவுடன், வருங்கால தமிழ்த் தலைமுறை மானமுடனும் அறிவுடனும் வளரும் என நம்பலாம்.


ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து

லண்டன்

பி.கு: ‘காட்டாறு’ அறிவியல் பண்பாட்டு மாத இதழுக்கு எழுதியது.

பருவம் 3. புனல் 36
நன்றி : காட்டாறு
இணையம் : http://kaattaaru.com/

Sunday, October 8, 2017

பிரிட்டனின் சமத்துவ சட்டத்தில் ஜாதி ஒழிப்பு?

பிரிட்டனின் சமத்துவ சட்டத்தில் ஜாதி ஒழிப்பு?
பிரிட்டன் தன்னுள் பல்வேறு நாடுகளின் மக்களை, மதத்தை, மொழியை, கலாசாரத்தை உள் வாங்கிக் கொண்டுள்ளது. அப்படி என்றால் ஹிந்து மதத்தையும் உள் வாங்கி உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. ஆமாம், ஹிந்து மதத்தையும் தன்னுள்ளே வைத்துள்ளது. அப்படியானால், ஹிந்து மதத்தின் சாரமான ‘வர்ணாஸ்ரம’ தர்மத்தையும், ‘ஸனாதன’ தர்மத்தையும் தன் உள்ளே வைத்துள்ளதா? ஆமாம்.
ஹிந்து மதம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் ‘வர்ணாஸ்ரம’ தர்மமும், ‘ஸனாதன’ தர்மமும் உள்ளது. முதலாவதாக தமிழர்கள் தங்களை ஹிந்துக்களாக நம்புகிறார்கள். தமிழர்கள் தங்களை ஹிந்துக்கள் என்று நம்பும் அறியாமையே பெரிதும் நிலவுகிறது. ஹிந்து எனும் வார்த்தை தமிழும் இல்லை. ஹிந்து எனும் மதம் தமிழரின் மதமும் இல்லை.


ஆனாலும் தமிழர்கள் தங்களை ஹிந்துக்கள் என்று நம்புவதற்கு மிக முக்கிய காரணம் பிரிட்டிஷாரே. பிரிட்டிஷார் தாங்கள் ஆண்ட இந்தியா, இலங்கை எனும் நிலப் பகுதியில் சைவ மதம், வைணவ மதம் ஆகிய அனைத்தையும் ஒரே கூட்டாக ‘ஹிந்து’ மதம் என்று அரசாங்க பதிவில் குறிப்பிட்டு விட்டார்கள். இந்த ‘ஹிந்து’ எனும் சொல் ‘வர்ணாஸ்ரம’ பிரியர்களுக்கும், ‘ஸனாதன’ பிரியர்களுக்கும் நல்லதொரு முகமூடியாக வாய்த்து விட்டது.


பணம் வேண்டிய போதும், தன் சமூக உயர்வு வேண்டிய போதும் எல்லோரையும் ஒருங்கிணைத்து ‘ஹிந்து’ என்று வேசம் கட்ட வசதியாக இருக்கிறது.


சமூக உயர்வு என்று குறிப்பிடுவது, தமிழர் தன் இல்லத்தில் நடத்தும் அனைத்து வாழ்வியல் நிகழ்ச்சியிலும் பிராமணரையே(பார்ப்பனரையே) வைத்து நடத்துகின்றனர். எ.கா: திருமணம், திதி, புதுமனை குடி புகுதல் மற்ற சடங்கு சம்பிரதாயம் எதுவானாலும்.


லண்டனில் நிறைய ஹிந்துக் கோயில்கள் இருக்கின்றன. அவற்றின் பணப்புழக்கத்தை மட்டும் பார்த்தாலே எவ்வளவு அறியாமை மற்றும் மூட நம்பிக்கை தமிழர் மத்தியில் உழல்கிறது என்று தெரிந்துக் கொள்ளலாம். எந்த ஒன்றையும் அளவிட முடிந்தால்தான் அதில் எது சரி? தவறு எது? என்பதை மதிப்பிட இயலும். கீழே லண்டனில் உள்ள 18  கோவில்களின் வருவாய் கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது.


Caste Discrimination Evidences in Hindu Temples in UK:

S.No
Hindu Temple Name
UK Charity Number
Income
Upper Caste ‘Brahmin’ Priests
Low
Caste
Non-Brahmin Priests.
Shudras (or) Dalits
1.
The London Sri Murugan Temple
271097
£ 769.8K
Many
0
2.
SKS Swaminarayan Temple
295655
£ 280.9K
Many
0
3.
SHREE KUTCH SATSANG SWAMINARAYAN TEMPLE (MANDIR) LONDON
271034
£ 1.8M
Many
0
4.
SHREE KUTCH SATSANG SWAMINARAYAN TEMPLE - SOUTH EAST LONDON
292934
£ 661.6K
Many
0
5.
SHREE KUTCH SATSANG SWAMINARAYAN TEMPLE (EAST LONDON)
295655
£ 280.9K
Many
0
6.
Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha
1143083
£ 11.3M
Many
0
7.
The Greenwich Hindu Temple (Mandir)
1106377
£ 100.6K
Many
0
8
Lakshmi-Narayana Trust
292677
£ 1.6M
Many
0
9
Shri Vallabh Nidhi - Uk
277833
£ 1.0M
Many
0
10
International Society For Krishna Consciousness London
1132794
£ 1.7M
Many
0
11
Hindu Tamil Cultural Association (Enfield)
1143043
£ 906.3K
Many
0
12
Brittania Hindu (Shiva) Temple Trust
269067
£ 506.3K
Many
0
13
The Shree Swaminarayan Temple
266260
£ 971.8K
Many
0
14
Shri Kanagathurkkai Amman (Hindu) Temple Trust
1014409
£ 1.2M
Many
0
15
Shree Swaminarayan Sidhant Sajivan Mandal London
252726
£ 1.5M
Many
0
16
Sree Ayyappa Seva Sangam (London)
1059478
£ 156.5K
Many
0
17
Shirdi Sai Baba Temple Association Of London
1138530
£ 617.9K
Many
0
18
London Sivan Kovil Trust
1051516
£ 535.1K
Many
0


மேலே குறிப்பிடுள்ள சில லண்டன் ஹிந்து கோவில்களின் மொத்த வருமானம் மட்டுமே £ 25.89 Million.
கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் 250 கோடி ரூபாய். வெறும் 18 கோவில்களில், அதுவும் லண்டனில் மட்டும்.



இவ்வளவு வருவாயையும் ‘வர்ணாஸ்ரம’ தர்மத்தின் படி நிலையில் உயர் ஜாதியாய் இருக்கும் பிராமணர்கள் மட்டுமே அளித்திருப்பார்கள் என்று நம்ப இயலாது. மாறாக இந்த பெரும் வருவாயை, பெரும் தொகையை ‘வர்ணாஸ்ரம’ அடுக்கில் கீழ் நிலையில் உள்ள சூத்திரர்களும் பஞ்சமர்களுமே அளித்திருப்பார்கள் என்று உறுதியாக கூற முடியும்.

நம் கேள்வி எல்லாம் இவ்வளவு பணம் செலவு செய்யும் எந்த சூத்திரரும், எந்த பஞ்சமரும் தான் ஏன் கீழ்  ஜாதி?  என்று என்றாவது எண்ணி இருப்பார்களா? எந்த பெண்ணாவது மாதத்தில் மூன்று நாட்கள் தான் ஏன் கோவிலுக்கு போகக் கூடாது என்று எண்ணி இருப்பார்களா? என்றால் இதுவரையில் இல்லை என்றே சொல்லலாம். எப்போது இந்த எண்ணம் வரும்? சுயமரியாதை  உணர்வு ஓங்கும் போது வரும். தன்மானம் தழைத்தோங்கினால் வளரும்.  

அது மட்டுமா, எந்த ஹிந்துக் கோயிலிலும்   உயர் ஜாதி பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராக இருக்க முடிகிறது. எந்த ஹிந்துக் கோயிலிலும் சூத்திரரோ அல்லது பஞ்சமரோ அர்ச்சகராக பணி  ஆற்ற முடியாது.
காரணம் ? ஹிந்து மதத்தின் ‘வர்ணாஸ்ரமம்’ மற்றும் ‘ஸனாதனம்’

அது என்ன ‘வர்ணாஸ்ரமம்’?
‘வர்ணாஸ்ரமம்’ என்றால் ஹிந்து மத அடுக்கில் நான்கு படி நிலைகள் இருக்கின்றன
  1. பிராமணர்
  2. சத்திரியர்
  3. வைசியர்
  4. சூத்திரர்
அவர்ண்ஸ்தர்கள் பஞ்சமர்கள் ஆவர்.
அது என்ன ‘ஸனாதனம்’?
‘ஸனாதனம்’ என்றால் நிலையானது. ஜாதி என்பது பிறப்பால் நிலையானது.


பணத்தையம் கொடுத்து, தன்மானத்தையும் இழந்து, பகுத்தறிவையும் இழந்து, பொருள் இழந்து, நேரம் மற்றும் உழைப்பு ஆகியவற்றை இழந்து நிற்கும் ஒரு இனமாகத்தான் லண்டனில் தமிழர்கள் இருக்கிறார்கள்.

அதற்காக சுயமரியாதைக்காரர்கள், பகுத்தறிவாளர்கள், முற்போக்காளர்கள் தமிழ் இனத்தில் இல்லவே இல்லை என்று கூற முடியாது.  இருக்கிறார்கள்! மிக மிக சொற்பமாக.  அரிதினும் அரிதாக.

தமிழர்கள் பொருளாதாரத்தில் மேலோங்கியும், தன்மானத்துடனும், பகுத்தறிவுடனும் வாழ வேண்டும் என்று யார்தான் விரும்ப மாட்டார்கள்?

எது எப்படியோ? பிரிட்டன் அரசாங்கத்தை ஒரு  வகையில் பாராட்டலாம். சமீபத்தில் ‘பிரிட்டனில் சாதியும் சமத்துவ சட்டமும்’ எனும் முன்னெடுப்பை எடுத்து வருகிறார்கள்.

அதாவது ‘ஜாதி’ என்பதை பிரிட்டனில் சமத்துவ சட்டத்தில் சேர்க்கலாமா? வேண்டாமா? அதற்கு உரிய ஆதாரங்கள் என்ன என்று மக்களிடம் கருத்து கேட்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு வாக்கெடுப்பை இதற்கு முன்னர் 2010ல் நிகழ்த்தி இருக்கிறது பிரிட்டன் பாராளுமன்றம். அப்போது ஜாதியை சமத்துவ சட்டத்தில் சேர்க்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளார்கள். அதாவது ஜாதியை சமத்துவ சட்டத்தில் சேர்க்க வேண்டாம் என்று 307 பேர் வாக்களித்துள்ளார்கள். ஜாதியை சமத்துவ சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று 243 பேர் வாக்களித்துள்ளார்கள். Reference : http://www.tamilsolidarity.org/british-mps-refuse-to-outlaw-caste-discrimination/

243 MPக்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று வாக்களித்து இருப்பது சாதாரண எண்ணிக்கை இல்லை. மிகப் பெரிய எண்ணிக்கை. இன்னும் 30 பேர் கூடுதலாக மனித நேயத்துடன் சிந்தித்து வாக்களித்தால் போதும்.

இப்போது மீண்டும் ஒரு கலந்தாய்வை  பிரிட்டன் பாராளுமன்றம் முன்னெடுக்கிறது. பிரிட்டன் பாராளுமன்றத்தின் குறிப்பை வாசிக்கையில் அவர்கள் ஆதாரங்களை எதிர்பார்க்கிறார்கள். அதற்கு நாம் வைக்கும் ஆதாரம் இதுதான்.

எல்லா ஹிந்து கோவில்களும் தங்களை தொண்டு நிறுவனமாக அரசாங்கத்திடம் பதிவு செய்துள்ளார்கள். அந்த ஹிந்து கோயில்களின் வருமானமும் அரசாங்கத்திடம் அதிகாரப் பூர்வமாக உள்ளது. பொது வெளியிலும் உள்ளது. இவ்வளவு பணத்தையும் சொத்தையும் ‘கடவுள்’ கொடுத்திருப்பார் என்று அரசாங்கமும் நம்பாது MPக்களும் நம்பமாட்டார்கள் என்று நம்பலாம். இவ்வளவு பணத்தையும் சொத்தையும் கொடுத்த ஹிந்து மக்களில், மேல் ஜாதியான பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராக இருக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கணி. அர்ச்சகர் வேலைக்கு ஆள் எடுக்கும் போதும் பிராமணர்களாக இருக்க வேண்டும் என்று தெளிவாக விண்ணப்பம் வெளியிடுவது இதனை உறுதி படுத்துகிறது. Reference : http://www.venkateswara.org.uk/Vacancies
Screen Shot 2017-08-29 at 13.17.43.png


வெகு சொற்பமான பிராமணர்கள் அர்ச்சகராகவும், மிக அதிகமான பிராமணர் அல்லாத ஹிந்துக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் அர்ச்சகர் ஆக முடியாத சூழல் பொதுமக்கள் நிதி ஆதாரத்தில் நடைபெறும் நிறுவனத்தில் இருப்பது எதைக் காட்டுகிறது? இவையே அரசாங்கத்தின் முன் உள்ள ஆதாரம். பார்க்கலாம், பிரிட்டன் பாராளுமன்றம் மனிதத்தின் பக்கமா? ஜாதியின் பக்கமா? என்று காலம் பதில் சொல்லும்.

திராவிடச் செல்வன்
ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து
இ லண்டன்


பி.கு: ‘காட்டாறு’ அறிவியல் பண்பாட்டு மாத இதழுக்கு எழுதியது.

பருவம் 3. புனல் 36
நன்றி : காட்டாறு
இணையம் : http://kaattaaru.com/